Print this page

மௌலானா முகமதலி. குடி அரசு - இரங்கல் செய்தி - 11.01.1931 

Rate this item
(0 votes)

மௌலானா முகம்மதலி அவர்கள் லண்டனில் காலமாய் விட்டதைக் கேட்டு வருந்தாதார் யாருமே இருக்கமாட்டார்கள். அவர் ஒரு உண்மையான வீரர். தனக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாய் வெளியில் சொல்லுபவர் களில் அவரும் ஒருவர். ஏழைமக்களை ஏமாற்றி பணக்காரர்களும் படித்த வர்களும் அனுபவிக்கும் போக்கியமாகிய சுயராஜ்யம் அவருக்கு எப்போ துமே பிடிக்காது. தேசீயப் பிரபலத்துக்காக தனது சமூக நலனை விட்டுக் கொடுக்கும் கொலைபாதகத்தனம் அவரிடம் கிடையவே கிடையாது. தான் சாகப்போவது உறுதி யென்று தெரிந்தே சீமைக்குப் போய் தனது கட்சித் தொண்டை ஆற்றிவிட்டு சாகத் துணிந்தவர், அவர் சீமைக்குப் போகாமல் இந்தியாவில் இருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் செத்திருக்கமாட்டார். 

அவர் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது சொன்ன ஒரு வாக்கியம் நமக்கு நன்றாய் ஞாபகம் இருக்கின்றது. அதாவது.

"நேற்று இருந்தவர்கள் இன்றைக்கு இல்லாமல் போவதைச் சிலர் ஆச்சரியமாய் கருதுகிறார்கள். ஆனால் நானோ, நேற்று இருந்தவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களே என்பதை ஒரு ஆச்சரியமாய்க் கருதுகிறேன்" என்று சொன்னார். 

சாவது அதுவும் எந்த நிமிஷத்திலும் சாவது தான் கிரமம் என்றும் உண்மை யென்றும் முடிவு செய்து கொண்டு சாகாமல் இருக்கும் ஒவ்வொரு வினாடியையும் லாபமாய் கருதிக்கொண்டு சாவதற்கு வருத்தப்படாமலும் கவலைப்படாமலும் இருக்கவேண்டும் என்கின்ற இயற்கையைக் கண்டு பிடித்து கவலையற்றிருந்தவர் அவரேயாவர். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதில் மிக்க பிடிவாதமும் உறுதியும் கொண்டவர். 

அன்றியும் முதலில் நான் முஸ்லீம், பிறகுதான் நான் இந்தியன் என்று அடிக்கடி சொல்லுபவர், தன்னைப்பற்றி தனது எதிரிகள் எவ்வளவோ பழிகளை கட்டிவிட்டும் அவற்றிற்கு பதில் சொல்லவேண்டுமே என்கின்ற பட்சியம் கூட இல்லாமல் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றுகூட லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படி நடக்கும் வீரகுணம் உடையவர் இவ் வருங்குணங்கள் கொண்ட ஒரு கலங்கா வீரர் மாண்டது உலக இயற்கையே யாயினும் வருந்தாமல் இருக்க முடியாது. 

குடி அரசு - இரங்கல் செய்தி - 11.01.1931

Read 31 times